Sunday, 5 July 2020

பண்டன்று பட்டினம் காப்பே

  - நிலவளம் கு.கதிரவன்.,

       வாழ்தல் என்பது மிகப்பெரிய அதிசயம்.  இவ்வுலகத்தில் அவதரித்த எல்லா உயிர்களும் வாழ்ந்தே ஆக வேண்டும்.  பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்தான் வாழ்க்கை.  இத்தகைய அனுபவமே வாழ்க்கையாகிவிட்டதால் வாழ்வு, உயிர், மரணம் போன்றவற்றை நாம் அதிகம் பேசுவது இல்லை.  ’’வாழ்க நின் வளனே, நின்னுடை வாழ்க்கைஎன்று பாடுகிறார் சங்க இலக்கியப் புலவர் காப்பியாற்றுக் காப்பியனார்.   அதாவது வாழ் நாட்கள் வாழப்பட வேண்டும் என்ற பொருளில்  நின் செல்வமும், நின்னுடைய வாழ்நாளும் வாழ்வன ஆகுகஎன்று மன்னனை வாழ்த்துகிறார்.

       வாழ்தலுக்கு உயிர் வேண்டும்.  உயிரின் நிலைப்புத் தன்மைக்கு சக்தி வேண்டும்.  இதற்கு மூல சக்தியாக விளங்குவது சூரிய ஒளி, வெப்பம், சேமிக்கப்பட்ட சக்தியான பூமியின் சூடு, சுற்றுச் சூழல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது.  ஆனால் இந்த உயிரானது இயற்கையாக நோய் என்கிற சேமிப்பை தன்னுள்ளே வைத்திருக்கிறது.  இன்றைய உலகப் பொருளாதார மாற்றம், வெப்பநிலை மாறுபாடு, சூழல் மாற்றம் போன்ற பல பிரச்சினைகளின் விளைவாக, கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் காச நோய், எய்ட்ஸ் முதல் தற்போதைய கொரோனா தொற்று நோய் வரை ஏற்படுகிறது.

       இவ்வுலகே ஒரு பெரிய உயிரி என்று எடுத்துக் கொண்டால், அவற்றின் அங்கங்களாக உலகத்தில் உள்ள பல்வேறு உயிரினங்கள் உள்ளது.  அங்கமாக உள்ள மனிதன் தறிகெட்டு பல தவறுகள் செய்வதால், உலக சுழற்சியில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  விளைவாக பல்வேறு நோய்கள், பருவ மழை மாற்றம், ஆழிப் பேரலை, பெரு வெள்ளம், தேவையில்லாத நேரத்தில் மழை போன்றவை ஏற்படுகிறது.

       இத்தகைய விளைவுகளை முன் கூட்டியே கணித்தவர்கள் நமது ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், ஞானிகள் போன்றோர்.  இவர்கள் வலியுறுத்தியது புறச் சுத்தத்தையும், அகச் சுத்தத்தையும்.  காரணம் நோயிற்கான காரணம் இவ்விரண்டு காரணிகள்தான்.  நமது நோய்ப் பிணி தீர பல்வேறு பாடல்கள், பதிகங்கள், பிரபந்தங்கள் வாயிலாக பாடி வைத்துள்ளனர்.  இவற்றை தினமும் உடல் சுத்தத்தோடு பாராயனம் செய்யும்போது நோய்கள் நம்மைவிட்டு அகலும் என்பது பல்லாயிரமாண்டு அனுபவம், நம்பிக்கையாகும்.

       வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வார்.  திவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியான ஐந்தாம் திருமொழி, இரண்டாம் பத்தில், தனது உடலினை பட்டினமாக உருவகித்து பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார்.  பண்டன்று பட்டினம் காப்பேஎன்று முடியுமாறு அமையும் அப்பாசுரங்கள் வாயிலாக, நோய்களுகு அதிகாரத் தோரணையோடு கட்டளையிடுகிறார்.  நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்என்ற அப்பரும், ஞான சம்பந்தரின் கோளறு திருப்பதிகத்தையும் நினைவு கூறுவதாக அமைந்துள்ளது ஆழ்வாரின் பாசுரங்கள்.

       பெரியாழ்வாருக்கு என்ன நோய் வந்திருக்க முடியும்?  கோதையைப் பிரிந்ததினால் ஏற்பட்ட மனநோயா?  அதனால் தமது உடம்பை நோயிடமிருந்து காப்பிடுகிறாரா? பண்டைய வல்வினை, மங்கிய வல்வினை, உற்ற உறுபிணி நோய்கள், ஆழ்வினைகள், வல்வினைகள் என்று பல்வேறு நோய்களுக்கும் சவால் விடுவதுபோல் தமது உடலுக்கு காப்பிடுகிறார் ஆழ்வார்.

       சங்க காலத்திற்குப் பின் வந்த முத்தொள்ளாயிரத்தில், குளிர்ந்த வாடைக் காற்று வழியாக எச்சரிக்கை விடுவது போல் பண்டன்று பட்டினம் காப்புஎன காப்பிடுகிறார் அந்நூலாசிரியர்.

              நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்

                தாமரையும், நீலமும் தைவந் - தியாமத்து

                வண்டொன்று வந்த்து வாரல் பனி வாடாய்

                பண்டன்று பட்டினங் காப்பு

அப்போது காவிரிப் பூம்பட்டினத்தில் காவல் இல்லை.  ஆனால் இப்போது அச்சம் தருகிற நெடிய வேலையுடைய நலங்கிள்ளியின் காவல் உள்ளது.  எனவே பண்டுபோல் இல்லை.  இன்று பட்டினம் காப்பு என்கிறார்.

       பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில், வேதப்பிரான் ஆதிசேஷன் படுக்கையோடு என் உடம்பில் புகுந்து பள்ளிகொண்டிருக்கிறான்.  நோய்காள்! பண்டுபோல் இல்லை. இப்பொழுது பட்டினம் காப்பு.  உய்யப் போமின் என்கிறார்.

 

              நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்

                கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெற உய்யப் போமின்

                மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிராணர் கிடந்தார்

                மைக் கொண்ட பாம்புஅணையோடும் பண்டன்று பட்டினம் காப்பே.

 

நெய்க்குடத்தைப் பிடித்துக் கொண்டு வரிசையாய் ஏறும் எறும்புகளைப் போல, உடம்பு முழுவதிலும் பரவிக் கொண்டு இருக்கிற நோய்களே, விரைவாகத் தப்பிச் சென்று விடுங்கள்.  வேதங்களால் கூறப்படும் எம்பிரானானவன் ஆதிசேடனாகிய படுக்கையோடும் என் உடம்பிலே விருப்பம் கொண்டு வந்து புகுந்து படுத்திருக்கிறான்.  என் உடல் முன்போல் அன்று.  இப்போது காவலைப் பெற்றிருக்கின்றது என்று கூறுகிறார்.

              உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பே ஆலயம்என்று திருமூலர் பாடியது போல், உயிரான உடலுக்குள் திருமால் உறைந்துள்ளதாக பாவித்து பெரியாழ்வார் பாடுகிறார்.  உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆயஎன்பார் திருஞான சம்பந்தர்.  உடலானது உயிருக்கு இருப்பிடம்போல, உயிர் இறைவனுக்கு இருப்பிடம்.  எவ்வுயிரும் ஈசன் சந்நிதியாகும்.

 

       சித்திரக் குத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறி ஒற்றி

        வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி ஒளிந்தார்

 

என்று எமதூதர்களையே ஓட விடுகிறார்.  சூரியன், சந்திரன், வாயு, அக்னி, ஆகாயம், பூமி, வருணன், இருதயம், எமன், பகல், இரவு, காலை, மாலை, தருமம் என்ற பதினான்குபேர் சாட்சியாக, ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையும் எழுதி வைப்பது போல் ஒரு சுவடியில் என் தீவினைகளையும் எழுதி வைத்ததை சுட்டுப் போட்டு ஓடி ஒளிந்தனர் என்று நகையாடுகிறார் பெரியாழ்வார்.  நித்திய சூரிகளின் தலைவன் எம்பெருமான் என்னுள் இருக்க, முன்புபோல் இல்லை ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்.

       பெரியாழ்வார் இந்த பத்து பாசுரங்களில் திருமால் அவதாரங்களையும் துணைக்கு அழைக்கிறார்.  மீண்டும் கர்ப்ப வாசத்தில் விழாதபடியும், ஐந்து இந்திரியங்களை அடக்கிவிடவும், நரம்பு, எலும்பு ஆகிய இவற்றோடு சேர்ந்த உடம்பை நீக்குமாறும் யம தூதர்களின் பாசக் கயிற்றை தடுத்தும், நல்லறிவை ஊட்டி, நல்லொழுக்கத்தோடு நடக்கும்படி செய்த வராஹ ஸ்வாமி என்னுள் இருப்பதால் நோய்களே ஓடி விடுங்கள் என்கிறார்.

       வல்வினை நோய்களுக்கே, தீவினை வந்துவிட்டதாக எச்சரிக்கிறார்.  ஹிரண்யனை வதம் செய்த சிங்கப்பிரான் என்னுள் திருக்கோயில் கொண்டுள்ளதால், அவமானப்படாமல் தப்பி ஓடி விடுங்கள் என்கிறார்.  பகவானை தீவினைக்கு ஒப்பிடலாமா? என்கிற அய்யம் ஏற்படலாம்.  நல்லவர்களுக்கு நல்லவன், கெட்டவர்களுக்கு கெட்டவன் என்கிறவிதத்தில் நோக்கினால் தவறில்லை என்பதை அறியலாம்.

       மாணிக் குறள் உரு ஆய மாயனைஎன்று அழகிய பிரமச்சாரியான வாமன அவதாரத்தையும், சம்சார சமுத்திரத்தில் ஆழங்காற்படுத்திய வினைகள், உற்ற உறுபிணி நோய்கள் அகல, ஸர்வேஸ்வரத்வத்திற்கும், புருஷோத்தமவத்திற்கும் இலக்கணமாகிய திருப் பீதாம்பரத்தை தரித்தவனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணரை முன்னிட்டு பட்டினம் காப்பிடுகிறார் பெரியாழ்வார்.

       உய்யப் போமின், பங்கப்படாது உய்யப் போமின், பாணிக்க வேண்டா நடமின் என்று நோய்களை அதிகாரத்தோடு விரட்டியவர், தன்னுள் கோயில் கொண்டுள்ள பரந்தாமனுக்கு காப்பிடுகிறார்.  பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூராயிரம்என பாடியவராயிற்றே.  தம்முள் உறையும் திருமாலுக்கு காப்பிடாமல் இருப்பாரா?

 

              உறகல், உறகல், உறகல் ஒண்சுடர் ஆழியே, சங்கே

                அறவெறி நாந்தக வாளே, அழகிய சார்ங்கமே, தண்டே

 

என்று, சக்கரமே, சங்கே, சார்ங்கமே, நாந்தக வாளே உறங்காதிருங்கள்.  எட்டுத்திக்குப் பாலகர்களே, பெரிய திருவடியான கருடாழ்வாரே பகவான் பள்ளி கொண்டுள்ள இவ்வுடலை கருத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்.  தமது உடம்பின் பாதுகாப்புக்காக பெரியாழ்வார் பைக்கொண்ட பாம்பணையோடு, மெய்க்கொண்டு வந்து புகுந்த பகவானை தமது உடம்பின் பாதுகாப்புக்காக துதிக்கிறார்.

       பண்டை வல்வினை பாற்றியருளினான்என்றருளிய மதுரகவியாழ்வாரும், ”உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்துஎன்ற பூத்த்தாழ்வார் பாசுரங்களில் ஆழ்ந்து திளைத்தது போல், பெரியாழ்வாரின் இந்த பத்துப் பாசுரமும் நமக்கு காப்பாக அமைந்துள்ளது.

       சுற்றுச் சூழல் ஆர்வலரும், ஆராய்ச்சியாளரும், தீர்க்கதரிசியுமான ஜேம்ஸ் எஃப்ரைப் லவ்லாக், மார்ச் 2010 அன்றுதி கார்டியன்செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில், கால நிலை மாற்றத்தைத் தடுக்க ஜனநாயகம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.  ஒரு பெரிய யுத்தம் நெருங்கும்போது, ஜனநாயகம் தற்போதைக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதை சிறந்த ஜனநாயக நாடுகள் கூட ஒப்புக் கொள்கின்றன.  கால நிலை மாற்றம் ஒரு போரைப் போன்ற கடுமையான பிரச்சினையாக இருக்கலாம்  என்ற உணர்வு எனக்கு உள்ளது.  ஜனநாயகத்தை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம்என்று கூறியது  தேசத்தின் தற்போதைய  நிலைமையோடு ஒப்பு நோக்கத் தக்கதாக உள்ளது.

        இப்படி கால நிலையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், கலியில் ஏற்படும் வினைகள் அகலவும், இம்மை மறுமைக்கும் துணையாக வந்திடவும், தற்கால நுண்கிருமிகள், நோய்த் தொற்று போன்ற கொடிய நோய்கள் நம்மை அண்டாதிருக்கவும், உள்ள நோய்கள் நம்மைவிட்டு விலகி ஓடிடவும் முத்தான பத்து பாசுரங்களை பாராயனம் செய்து பண்டன்று பட்டினம் காப்பேஎன உய்த்து வளம் பெறுவோம்.


No comments:

Post a Comment

வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

  வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி -     நிலவளம் கு . கதிரவன் .,        இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும் , அக் கடவுள்களுக்கு எண்ணற்ற...