Saturday 22 August 2020

வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

 வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

-    நிலவளம் கு. கதிரவன்.,


       இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும், அக் கடவுள்களுக்கு எண்ணற்ற விழாக்கள் என குறிப்பிட்ட கடவுளின் குறியீடாக இந்து சமய விழாக்கள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறதுஅவ்வகையில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஆவணி மாதம், சுக்லபட்சம், ஹஸ்த நட்சத்திரம், வளர்பிறை சதுர்த்தி அன்று அவரின் அவதார தினமாக சதுர்த்தி திருவிழா பணக்காரர், ஏழை என்ற பேதமில்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதுஇந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் விழா என்றால் அது விநாயகர் சதுர்த்திதான்

கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட காலனும் கை தொழும்

கணபதி என்றிட கருமம் ஆதலால்

கணபதி என்றிட கவலை தீருமே

 

என்ற விநாயகர் துதி கேட்காத இடமே இல்லை எனலாம்அந்த அளவிற்கு மக்களோடும், கலாச்சாரத்தோடும் கலந்தது விநாயகர் வழிபாடாகும்.


விநாயகர் அவதரித்த வரலாறு :

       முன்னொரு காலத்தில்  கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் ,இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான்அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்றிருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

       எனவே அனைத்து தேவர்களும் ஒன்று சேர்ந்து சென்று சிவபெருமானிடம் சரண் அடைந்தனர்இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

       விநாயகருக்கும், கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான்விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார். பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார்இதன் மூலம் அனைவரும் மகிழ்ந்தனர்நல்வாழ்வெய்தினர்எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாகியதுஅன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும்.

 

வரலாற்றில் விநாயகர் :

       விநாயகர் சதுர்த்தி பற்றிய முதல் குறிப்பு ரிக் வேதத்தில் உள்ளதுஞானத்தின் அதிபதியான இவரைப் பற்றிய விரிவான கதைகள் வேதத்திற்குப் பின்னான புராணங்களில் வந்தனமஹாபாரதத்தில் விநாயகராகவும், கந்தபுராணம், நாரதபுராணம் போன்றவற்றில் கணபதி என்றும் குறிப்புகள் உள்ளன.

       உருவ வழிபாடு 8-ஆம் நூற்றாடுக்குப் பின்னரே வந்ததாகச் சொல்கிறார்கள்எல்லோரா குகையில்( கி.பி.5-8 ) சக்தி தேவிக்கு அருகில் இருக்கும் விநாயகரே பழமையானவராக தெரிகிறார்இந்த கால கட்டத்தில்தான் விந்திய மலைக்கு கீழிருக்கும் தக்கான பீடபூமி பகுதிகளான சாளுக்கிய தேசமான கர்நாடகாவிற்கு சென்றடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

       மேலும் வாதாபியில் இருந்து வந்த சமஸ்கிருத ஆன்மிகவாதிகளால் விநாயகர் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், கி.பி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே தமிழகத்தின் பழமையான விநாயகர் சிலை என்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்பிள்ளையார்பட்டியில் உள்ள குடைவரைக் கோயிலில் உள்ள விநாயகர் சிலையும் மிகப் பழமையானதாகும்.  

இந்தியாவில் விநாயகர் வழிபாடு :

       இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டாலும், மும்பையில் கொண்டாடப்படும் விழாவே பிரசித்தி பெற்றதாகும்புனேவில் மராத்திய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜி, முகலாய-மராத்திய போருக்கு பின்னான காலத்தில்தான் முதன் முறையாக விழா மேற்கொள்ளப்பட்டதுதொடர்ந்து பண்டைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களை ஒன்றினைக்க பாலகங்காதரத் திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவினை மக்களிடையே கொண்டு சென்று, மக்களை ஒன்றினைக்க அவ்விழாவை ஒரு யுக்தியாக பயன்படுத்திக் கொண்டார்இதனால் மக்களிடையே ஏழை-பணக்காரன் வித்தியாசமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக மாறியதுஇன்று நேபாளத்தில் முழுமையாகவும், மொரிசீயஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா மற்றும் லண்டனிலும் வெகு சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் வழிபாட்டு முறைகள் :

       விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியமாகும்இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ, வைணவ சமயத்தோடு ஒன்றிணைந்ததுகிருதயுகத்தில் மகாசுடர், திரேதாயுகத்தில் மயூரேசர், துவாபர யுகத்தில் கஜானனன், கலியுகத்தில் கணேசர், பிள்ளையார், கணபதி, ஆனை முகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என்று சுமார் 32 மூர்த்தங்களில் வழிபடப்பட்டு வருகிறது

       மனிதனுக்கு வாயும், உதடும் வெளியே தெரியும்மற்ற மிருகங்களுக்கும் அப்படியேயானையின் வாயை தும்பிக்கை மூடிக்கொண்டிருக்கிறதுவெளியே தெரியாதுதேவையின்றி பேசக் கூடாது என்றும், தேவையற்ற பேச்சு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது இதனால் விளக்கப்படுகிறதுஇந்து கடவுளில் முதன்மையானவராக போற்றப்படும் இவர் வெற்றியை வழங்கும் வல்லவராகவும், தடைகளை தகர்ப்பவராகவும், ஞானத்தின் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம் போன்றவை நிவேதனமாக படைக்கப்படுகிறதுவிநாயகர் சதுர்த்தி அன்று அவர் திருஉருவத்திற்கு அருகம்புல், மல்லிகைப் பூ, எருக்கம்பூ போன்றவற்றால் அலங்கரித்து தினமும் பூஜை செய்து 3 முதல் 10 நாட்களுக்குப் பிறகு நீர் நிலைகளில் விடப்படுகிறது.

       விநாயகர் நிவேதனத்தில்  கொழுக்கட்டை பிராதான இடம் வகிக்கும் பொருளாகும்தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமாகும்மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம். நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளதுமாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளி வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுவதாக பெரியோர்கள் கூறுகின்றனர்.

       விநாயகரை வழிபடும் முறைகளில் தோப்புக் கரணமும் ஒன்றாகும்கரணம் என்றால் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம்இவைகளைத் தோற்பது தோற்புக்கரணம் எனலாம்விநாயகர் முன் இவைகளையெல்லாம் இழந்து தூய்மை அடைய வேண்டும் என்றும், நாம் நமது தவறை உணர்ந்து வந்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என வேண்டுவதே தோப்புக்கரணமாகும்.

       மேலும் விநாயகர் வழிபாடானது கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் மார்கழி மாதத்து சுக்லபட்ச சஷ்டி முடிய 21 நாள்களும் விநாயகரை வழிபட அனுஷ்டிக்கப்படும் இவ்விரதத்தில் 21 இழைகளினால் ஆன காப்புக் கயிற்றினை கணவனும்-மனைவியும் வல, இடக் கரங்களில் அணிந்து விரத நோன்பை மேற்கொள்வர்முடிவு நாட்களில் பலவிதமான உணவுகளைப் பிறருக்குத் தானமாகக் கொடுத்து விரதத்தை முடிப்பர்.

இலக்கியங்களில் விநாயகர் :

       விநாயகர் அகவல் என்ற நூலினை ஔவையாரும், புதுச்சேரி மணக்குள விநாயகரை போற்றிப் பாடும் விநாயகர் நான்மணிமாலை என்ற நூலினை பாரதியாரும், திருக்கடவூர் கன்னவாரண பிள்ளையார் பதிகத்தை அபிராமப் பட்டரும், கணேச பஞ்சரத்தினத்தை ஆதிசங்கரரும், விநாயக பரத்துவம் என்ற நூலினை குமரகுருசாமி குருக்கள் என்பவரும் எழுதி விநாயகர் புகழ் பரப்பியுள்ளனர்.

     நமது பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும் இரண்டரக் கலந்துவிட்ட விநாயகர் சதுர்த்தி விழாவினை நாமும் நமது அஹங்காரங்களை விட்டொழிக்கவும், காரிய சித்தியடையவும், உயர் ஞானம் பெறவும் பக்தியோடு விநாயகருக்கு படையலிட்டு, வணங்கி மெய் ஞானம் ஓங்கி வாழ்வோம். 


‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’

Sunday 5 July 2020

பண்டன்று பட்டினம் காப்பே

  - நிலவளம் கு.கதிரவன்.,

       வாழ்தல் என்பது மிகப்பெரிய அதிசயம்.  இவ்வுலகத்தில் அவதரித்த எல்லா உயிர்களும் வாழ்ந்தே ஆக வேண்டும்.  பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்தான் வாழ்க்கை.  இத்தகைய அனுபவமே வாழ்க்கையாகிவிட்டதால் வாழ்வு, உயிர், மரணம் போன்றவற்றை நாம் அதிகம் பேசுவது இல்லை.  ’’வாழ்க நின் வளனே, நின்னுடை வாழ்க்கைஎன்று பாடுகிறார் சங்க இலக்கியப் புலவர் காப்பியாற்றுக் காப்பியனார்.   அதாவது வாழ் நாட்கள் வாழப்பட வேண்டும் என்ற பொருளில்  நின் செல்வமும், நின்னுடைய வாழ்நாளும் வாழ்வன ஆகுகஎன்று மன்னனை வாழ்த்துகிறார்.

       வாழ்தலுக்கு உயிர் வேண்டும்.  உயிரின் நிலைப்புத் தன்மைக்கு சக்தி வேண்டும்.  இதற்கு மூல சக்தியாக விளங்குவது சூரிய ஒளி, வெப்பம், சேமிக்கப்பட்ட சக்தியான பூமியின் சூடு, சுற்றுச் சூழல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது.  ஆனால் இந்த உயிரானது இயற்கையாக நோய் என்கிற சேமிப்பை தன்னுள்ளே வைத்திருக்கிறது.  இன்றைய உலகப் பொருளாதார மாற்றம், வெப்பநிலை மாறுபாடு, சூழல் மாற்றம் போன்ற பல பிரச்சினைகளின் விளைவாக, கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் காச நோய், எய்ட்ஸ் முதல் தற்போதைய கொரோனா தொற்று நோய் வரை ஏற்படுகிறது.

       இவ்வுலகே ஒரு பெரிய உயிரி என்று எடுத்துக் கொண்டால், அவற்றின் அங்கங்களாக உலகத்தில் உள்ள பல்வேறு உயிரினங்கள் உள்ளது.  அங்கமாக உள்ள மனிதன் தறிகெட்டு பல தவறுகள் செய்வதால், உலக சுழற்சியில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  விளைவாக பல்வேறு நோய்கள், பருவ மழை மாற்றம், ஆழிப் பேரலை, பெரு வெள்ளம், தேவையில்லாத நேரத்தில் மழை போன்றவை ஏற்படுகிறது.

       இத்தகைய விளைவுகளை முன் கூட்டியே கணித்தவர்கள் நமது ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், ஞானிகள் போன்றோர்.  இவர்கள் வலியுறுத்தியது புறச் சுத்தத்தையும், அகச் சுத்தத்தையும்.  காரணம் நோயிற்கான காரணம் இவ்விரண்டு காரணிகள்தான்.  நமது நோய்ப் பிணி தீர பல்வேறு பாடல்கள், பதிகங்கள், பிரபந்தங்கள் வாயிலாக பாடி வைத்துள்ளனர்.  இவற்றை தினமும் உடல் சுத்தத்தோடு பாராயனம் செய்யும்போது நோய்கள் நம்மைவிட்டு அகலும் என்பது பல்லாயிரமாண்டு அனுபவம், நம்பிக்கையாகும்.

       வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வார்.  திவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியான ஐந்தாம் திருமொழி, இரண்டாம் பத்தில், தனது உடலினை பட்டினமாக உருவகித்து பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார்.  பண்டன்று பட்டினம் காப்பேஎன்று முடியுமாறு அமையும் அப்பாசுரங்கள் வாயிலாக, நோய்களுகு அதிகாரத் தோரணையோடு கட்டளையிடுகிறார்.  நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்என்ற அப்பரும், ஞான சம்பந்தரின் கோளறு திருப்பதிகத்தையும் நினைவு கூறுவதாக அமைந்துள்ளது ஆழ்வாரின் பாசுரங்கள்.

       பெரியாழ்வாருக்கு என்ன நோய் வந்திருக்க முடியும்?  கோதையைப் பிரிந்ததினால் ஏற்பட்ட மனநோயா?  அதனால் தமது உடம்பை நோயிடமிருந்து காப்பிடுகிறாரா? பண்டைய வல்வினை, மங்கிய வல்வினை, உற்ற உறுபிணி நோய்கள், ஆழ்வினைகள், வல்வினைகள் என்று பல்வேறு நோய்களுக்கும் சவால் விடுவதுபோல் தமது உடலுக்கு காப்பிடுகிறார் ஆழ்வார்.

       சங்க காலத்திற்குப் பின் வந்த முத்தொள்ளாயிரத்தில், குளிர்ந்த வாடைக் காற்று வழியாக எச்சரிக்கை விடுவது போல் பண்டன்று பட்டினம் காப்புஎன காப்பிடுகிறார் அந்நூலாசிரியர்.

              நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்

                தாமரையும், நீலமும் தைவந் - தியாமத்து

                வண்டொன்று வந்த்து வாரல் பனி வாடாய்

                பண்டன்று பட்டினங் காப்பு

அப்போது காவிரிப் பூம்பட்டினத்தில் காவல் இல்லை.  ஆனால் இப்போது அச்சம் தருகிற நெடிய வேலையுடைய நலங்கிள்ளியின் காவல் உள்ளது.  எனவே பண்டுபோல் இல்லை.  இன்று பட்டினம் காப்பு என்கிறார்.

       பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில், வேதப்பிரான் ஆதிசேஷன் படுக்கையோடு என் உடம்பில் புகுந்து பள்ளிகொண்டிருக்கிறான்.  நோய்காள்! பண்டுபோல் இல்லை. இப்பொழுது பட்டினம் காப்பு.  உய்யப் போமின் என்கிறார்.

 

              நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்

                கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெற உய்யப் போமின்

                மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிராணர் கிடந்தார்

                மைக் கொண்ட பாம்புஅணையோடும் பண்டன்று பட்டினம் காப்பே.

 

நெய்க்குடத்தைப் பிடித்துக் கொண்டு வரிசையாய் ஏறும் எறும்புகளைப் போல, உடம்பு முழுவதிலும் பரவிக் கொண்டு இருக்கிற நோய்களே, விரைவாகத் தப்பிச் சென்று விடுங்கள்.  வேதங்களால் கூறப்படும் எம்பிரானானவன் ஆதிசேடனாகிய படுக்கையோடும் என் உடம்பிலே விருப்பம் கொண்டு வந்து புகுந்து படுத்திருக்கிறான்.  என் உடல் முன்போல் அன்று.  இப்போது காவலைப் பெற்றிருக்கின்றது என்று கூறுகிறார்.

              உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பே ஆலயம்என்று திருமூலர் பாடியது போல், உயிரான உடலுக்குள் திருமால் உறைந்துள்ளதாக பாவித்து பெரியாழ்வார் பாடுகிறார்.  உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆயஎன்பார் திருஞான சம்பந்தர்.  உடலானது உயிருக்கு இருப்பிடம்போல, உயிர் இறைவனுக்கு இருப்பிடம்.  எவ்வுயிரும் ஈசன் சந்நிதியாகும்.

 

       சித்திரக் குத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறி ஒற்றி

        வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி ஒளிந்தார்

 

என்று எமதூதர்களையே ஓட விடுகிறார்.  சூரியன், சந்திரன், வாயு, அக்னி, ஆகாயம், பூமி, வருணன், இருதயம், எமன், பகல், இரவு, காலை, மாலை, தருமம் என்ற பதினான்குபேர் சாட்சியாக, ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையும் எழுதி வைப்பது போல் ஒரு சுவடியில் என் தீவினைகளையும் எழுதி வைத்ததை சுட்டுப் போட்டு ஓடி ஒளிந்தனர் என்று நகையாடுகிறார் பெரியாழ்வார்.  நித்திய சூரிகளின் தலைவன் எம்பெருமான் என்னுள் இருக்க, முன்புபோல் இல்லை ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்.

       பெரியாழ்வார் இந்த பத்து பாசுரங்களில் திருமால் அவதாரங்களையும் துணைக்கு அழைக்கிறார்.  மீண்டும் கர்ப்ப வாசத்தில் விழாதபடியும், ஐந்து இந்திரியங்களை அடக்கிவிடவும், நரம்பு, எலும்பு ஆகிய இவற்றோடு சேர்ந்த உடம்பை நீக்குமாறும் யம தூதர்களின் பாசக் கயிற்றை தடுத்தும், நல்லறிவை ஊட்டி, நல்லொழுக்கத்தோடு நடக்கும்படி செய்த வராஹ ஸ்வாமி என்னுள் இருப்பதால் நோய்களே ஓடி விடுங்கள் என்கிறார்.

       வல்வினை நோய்களுக்கே, தீவினை வந்துவிட்டதாக எச்சரிக்கிறார்.  ஹிரண்யனை வதம் செய்த சிங்கப்பிரான் என்னுள் திருக்கோயில் கொண்டுள்ளதால், அவமானப்படாமல் தப்பி ஓடி விடுங்கள் என்கிறார்.  பகவானை தீவினைக்கு ஒப்பிடலாமா? என்கிற அய்யம் ஏற்படலாம்.  நல்லவர்களுக்கு நல்லவன், கெட்டவர்களுக்கு கெட்டவன் என்கிறவிதத்தில் நோக்கினால் தவறில்லை என்பதை அறியலாம்.

       மாணிக் குறள் உரு ஆய மாயனைஎன்று அழகிய பிரமச்சாரியான வாமன அவதாரத்தையும், சம்சார சமுத்திரத்தில் ஆழங்காற்படுத்திய வினைகள், உற்ற உறுபிணி நோய்கள் அகல, ஸர்வேஸ்வரத்வத்திற்கும், புருஷோத்தமவத்திற்கும் இலக்கணமாகிய திருப் பீதாம்பரத்தை தரித்தவனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணரை முன்னிட்டு பட்டினம் காப்பிடுகிறார் பெரியாழ்வார்.

       உய்யப் போமின், பங்கப்படாது உய்யப் போமின், பாணிக்க வேண்டா நடமின் என்று நோய்களை அதிகாரத்தோடு விரட்டியவர், தன்னுள் கோயில் கொண்டுள்ள பரந்தாமனுக்கு காப்பிடுகிறார்.  பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூராயிரம்என பாடியவராயிற்றே.  தம்முள் உறையும் திருமாலுக்கு காப்பிடாமல் இருப்பாரா?

 

              உறகல், உறகல், உறகல் ஒண்சுடர் ஆழியே, சங்கே

                அறவெறி நாந்தக வாளே, அழகிய சார்ங்கமே, தண்டே

 

என்று, சக்கரமே, சங்கே, சார்ங்கமே, நாந்தக வாளே உறங்காதிருங்கள்.  எட்டுத்திக்குப் பாலகர்களே, பெரிய திருவடியான கருடாழ்வாரே பகவான் பள்ளி கொண்டுள்ள இவ்வுடலை கருத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்.  தமது உடம்பின் பாதுகாப்புக்காக பெரியாழ்வார் பைக்கொண்ட பாம்பணையோடு, மெய்க்கொண்டு வந்து புகுந்த பகவானை தமது உடம்பின் பாதுகாப்புக்காக துதிக்கிறார்.

       பண்டை வல்வினை பாற்றியருளினான்என்றருளிய மதுரகவியாழ்வாரும், ”உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்துஎன்ற பூத்த்தாழ்வார் பாசுரங்களில் ஆழ்ந்து திளைத்தது போல், பெரியாழ்வாரின் இந்த பத்துப் பாசுரமும் நமக்கு காப்பாக அமைந்துள்ளது.

       சுற்றுச் சூழல் ஆர்வலரும், ஆராய்ச்சியாளரும், தீர்க்கதரிசியுமான ஜேம்ஸ் எஃப்ரைப் லவ்லாக், மார்ச் 2010 அன்றுதி கார்டியன்செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில், கால நிலை மாற்றத்தைத் தடுக்க ஜனநாயகம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.  ஒரு பெரிய யுத்தம் நெருங்கும்போது, ஜனநாயகம் தற்போதைக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதை சிறந்த ஜனநாயக நாடுகள் கூட ஒப்புக் கொள்கின்றன.  கால நிலை மாற்றம் ஒரு போரைப் போன்ற கடுமையான பிரச்சினையாக இருக்கலாம்  என்ற உணர்வு எனக்கு உள்ளது.  ஜனநாயகத்தை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம்என்று கூறியது  தேசத்தின் தற்போதைய  நிலைமையோடு ஒப்பு நோக்கத் தக்கதாக உள்ளது.

        இப்படி கால நிலையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், கலியில் ஏற்படும் வினைகள் அகலவும், இம்மை மறுமைக்கும் துணையாக வந்திடவும், தற்கால நுண்கிருமிகள், நோய்த் தொற்று போன்ற கொடிய நோய்கள் நம்மை அண்டாதிருக்கவும், உள்ள நோய்கள் நம்மைவிட்டு விலகி ஓடிடவும் முத்தான பத்து பாசுரங்களை பாராயனம் செய்து பண்டன்று பட்டினம் காப்பேஎன உய்த்து வளம் பெறுவோம்.


காயம் காக்கும் யோகம்!


- நிலவளம் கு. கதிரவன்

(இன்று ஜூன் 21 சர்வதேச யோகா தினம்)

பாரத நாடு பழம்பெரும் நாடு. நமது புண்ணிய பூமியாம் பாரதத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல சித்த மஹா புருஷர்கள் அவதரித்து வலம் வந்த பூமியாகும். மக்கள் நெறிமுறைகளுடன் வாழ்வதற்கான பற்பல வழிகளை காட்டிச் சென்றுள்ளனர். அந்த வகையில் நமக்கு அரிதாக காட்டிச் சென்ற கலை யோகக் கலையாகும். காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா, மாயனார் குயவர் செய்த, மண் பாண்டம் ஓடா என்று ஒரு சித்தர் பாடியுள்ளார். இந்த உடல் நிலையானது என்ற நினைப்பில் ஆடம்பர அணிகலன்கள், ஆடை, தைலப் பூச்சு, ஆர்பாட்ட உணவு என்று வளர்த்து வருகிறார்கள். ஆனால் இந்த உடல் நிலையானது இல்லை. என்று கூறியிருந்தாலும் இந்த நிலையற்ற வாழ்க்கையில் இருக்கும் வரை நமது உடலை பேணிப் பாதுகாத்து ஆரோக்யமாக வாழவும் நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். அந்த வகையில் அவர்கள் நமக்கு கொடையாக வழங்கியதுதான் யோகக் கலையில் உள்ள ஆசனங்கள்.

யோகம் என்பதற்கான வேர்ச்சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியதாகும். யோகம் என்ற சொல்லுக்கு ஒருங்கிணைத்தல் அல்லது எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி முழுமைப்படுத்துதல் என்பது பொருளாகும். கலையும் மனதை அலையாமல் நேர் வழிப் படுத்தும் செயல்தான் யோகம். யோகம் என்பது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனித் திறன். பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இத்தகைய செயல் திறனையே போதிக்கிறார். உலகில் மனிதர்கள் மூன்று வகையில் உள்ளனர். அவர்கள் உருவத்தாலும், உணர்வாலும், அறிவாலும் வேறுபட்டு உள்ளனர். அத்தகைய மனிதர்கள் எவ்வித நோய் நொடியுமின்றி வாழவும், வந்த நோய் பறந்தோடவும் யோகாசனம் துணைபுரிகிறது.

இன்றைய உலகமயமாக்கலில் மக்களின் வாழ்வியல் முறை முற்றாக மாறியுள்ளது. அவசர உலகத்தில் போட்டி, பொறாமை, தன் முனைப்பு, ஒழுக்கக் கேடுகள், உணவு முறைகள் ஆகியவற்றால் இந்த உடலானது பற்பல நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகிறது. மாணவர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பாடச் சுமை, தேர்வுகள், தேர்வில் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் குழப்பமும் மனச் சோர்வும் அடைகின்றனர். இதிலிருந்து விடுபட மனதை ஒருமுகப் படுத்த வேண்டும். உயிர்களுக்கு துன்பம் தரா உயர்ந்த செயல் ஒழுக்கமாகும். கல்வியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் கற்பிக்கப்படல் வேண்டும். அன்பும், பண்பும் மாணவர்கள் மனதில் உள்ளுணர்வாக வெளிப்படல் வேண்டும். அதற்கு பெரும் துணையாய் இருப்பதும், மாணவர்களின் உடல், மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வழி செய்வதும் அவர்களுக்கான எளிய முறை யோகாசன பயிற்சிகள் பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் உடல் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், காந்த ஓட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியவை சீர்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மற்றும் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும். உடல் நலம் மற்றும் மன நலம் மேம்படும்.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே

என்றார் திருமூலர். நமது உடம்பை இழுக்கென்றும், அழுக்கென்றும் எண்ணுவதை பேதமை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறைவன் என் உள்ளேயும் இருந்து என்னைப் பெருமைப் படுத்துகிறான் என்ற மெய்யறிவில் மேனி சிலிர்த்தார் திருமூலர். அவரே,

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்கிறார். அதாவது உடம்பை என்றது உடம்பின் வலிமையை மட்டுமல்ல. உடம்பில் உள்ள திறமைகளையும்தான் என்று உடல் நலத்தின் அவசியத்தையும், உள நலத்தின் மேன்மையையும் நமக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த உடல் என்று கூறப்படும் காயம் கல்பமாக மாறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி, ஆசனப் பயிற்சி, உளப் பயிற்சி அவசியமாகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்திய உடற்பயிற்சியானது மூன்று வகையாக உள்ளது. கைகளை வலிமையாக்கும் தண்டால் பயிற்சி, உட்கார்ந்து எழும் பயிற்சியான பஸ்கிப் பயிற்சி, வயிற்றுப் பகுதிக்கு உள்ளே உள்ள உறுப்புகளை வலிமைப்படுத்தி மூளை, நரம்புகள் முழுமையாக செயல்பட உதவும் ஆசனப் பயிற்சி என பிரித்து வைத்துள்ளனர்.

அதேபோல் யோகப் பயிற்சியில் ராஜயோகம், ஹடயோகம், கர்மயோகம், ஞான யோகம், பக்தியோகம், மந்திர யோகம் என பல பிரிவுகள் உள்ளது. இதில் ஹடயோகம் என்று கூறப்படுகிற யோகாசனங்கள் மொத்தம் 108 என்றும் அவற்றுள் மிக முக்கியமானவை 72 என்றும் கூறுவர். 72 முக்கிய யோகாசனங்களை ஏற்படுத்தியதற்கும் ஒரு காரணம் உண்டு. நல்ல உடல் வலிமை உள்ள ஒருவருக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை நாடித் துடிப்பு உண்டு. அந்த ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு ஆசனமாக மொத்தம் 72 ஆசனங்களை செய்ய வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்துரைத்துள்ளனர். இந்த ஆசன முறைகளை ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைப்படி, இயம, நியமங்களோடு வகுத்துள்ளனர். எந்த வழிமுறையை பின்பற்றினாலும், செல்லும் பாதை வேறானாலும் சென்று சேரும் இடம் ஒன்றுதான் என்று கூறுவது போன்று பலன் ஒன்றுதான்.

உடற்பயிற்சி பாவப் பதிவுகளை போக்க வல்லன. பாவப் பதிவு என்பது துன்பம் தரக் கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச் செயல் பதிவுகளும் ஆகும் என்கிறார் வேதாத்ரி மஹரிஷி. முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்கு சீர்குலைந்து அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு ஏற்பட்டு ( short circuit ) மனத்திலும், உடலிலும் நோய் தோன்றி அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே அதுவே வினைப் பதிவாகும் என்கிறார் மஹரிஷி. இதை முறையான யோகாசனப் பயிற்சியின் வழியே நீக்கலாம் என்று கூறி எளிய முறை யோகாசனப் பயிற்சி வழிமுறைகளையும் தந்துள்ளார். அதே போன்று ஈஷா யோக மையத்திலும் ஹடயோகப் பயிற்சிகள் அவர்களின் நெறிமுறைப்படி வழங்கப்படுகிறது.

மனித உடலானது பஞ்ச பூதங்களால் ஆனது. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூத அடுக்கு. பிருதிவி என்னும் மண், பரு உடலாகவும், அப்பு என்னும் நீர் ரத்தமாகவும், தேயு என்னும் நெருப்பு உடல் சூடாகவும், வாயு என்னும் காற்று மூச்சாகவும், ஆகாசம் என்பது உயிர்ச் சக்தியாகவும் இருக்கின்றன. நீர், நெருப்பு, காற்று இந்த மூன்றும் சேர்ந்து பருப்பொருளான உடலையும், நுண் பொருளான உயிர்ச் சக்தியையும் இணைத்து அவை நட்போடு இயங்கச் செய்கின்றன. இந்த அலைவரிசையில் மாற்றம் ஏற்படும்போது உடல் வலியாகவும், நோயாகவும் வெளிப்படுகிறது. இதை தவிர்க்க யோகாசனப் பயிற்சிகள் அவசியம் என்பதே அப்பெரியோர்கள் வலியுறுத்தும் வழிமுறைகளாகும்.

ஆசனம் என்பது உடல் உறுப்புக்களை உரிய முறையில் மடக்கி ஒரு நிலையில் கொண்டு வந்து அமர்ந்து அதன் மூலம் மனத்தினைக் கட்டுப்படுத்தும் இருப்பு நிலைதான் ஆசனம். ஆசனத்தில் நான்கு வகைகள் உள்ளது. இரு கால்களையும் நீட்டி பிறகு கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையிலிருந்து செய்யும் ஆசனங்கள், மல்லாந்து படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள், குப்புறப் படுத்துக் கொண்டு செய்யும் ஆசனம், நின்ற நிலையிலிருந்தே செய்யும் ஆசனம் ஆகும்.

இத்தகைய ஆசனங்களை தினசரி செய்து வரும்போது உடல் வளம், சுறுசுறுப்பான வாழ்க்கை, முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றல், நன்றாக பசி எடுத்தல், நோய்கள் ஆரம்ப நிலையிலேயே குணமாகுதல், இதயம், நுரையீரல், மூளை செழிப்படைதல், தடையற்ற ரத்த ஓட்டம், உடல் உறுப்புகள் விரைப்புத் தன்மையில்லாமல் செயலுக்கு இணங்கும் தன்மை பெறுதல், முக்கியமாக மூளைக்கு போதிய பிராண வாயு கிடைத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.

இது தவிர தேகத்திற்கு வந்த நோயினைப் போக்கி இனி நோய்கள் வராமல் காத்தல், உள்ளுறுப்பு, வெளியுறுப்புகளை தூய்மைப்படுத்தி அதனதன் பணிகளை செய்தல், செயலாற்றலை மிகுதிப்படுத்தி உடல் நலமும், மன வளமும் பெற்று வாழ்தல், தினசரி கழிவுகளை வெளியேற்றி உடலை கசடற்ற முறையில் வைத்துக் கொள்ளுதல், நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கை, மனதாலும், செயலாலும் உயர்ந்த வாழ்வைப் பெறுதல் போன்ற நன்மைகளும் யோகாசனப் பயிற்சியின் வழியாக கிடைக்கிறது.

பாரதத்தின் பாரம்பரியமான, மரபான கலையான யோகக் கலையின் பெருமையை உணர்ந்த ஐ.நா அமைப்பு ஜுன்-21ம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்து நமது பாரத கலைக்கு பெருமை சேர்த்துள்ளது. ஆனால் நாம்தான் இன்னும் விழிப்பற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தினசரி இந்த யோகாசனப் பயிற்சியை செய்து வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். இந்த யோகாசனப் பயிற்சியை தினசரி காலை 7.00 மணிக்குள் வெறும் வயிற்றுடன், தரையில் ஒரு விரிப்பு போட்டு அதன் மீது அமர்ந்து செய்ய வேண்டும். பெண்கள் மாத விலக்கு காலங்களில் செய்யாமல் இருப்பது நலம். எனவே இன்று முதல் யோகாசனப் பயிற்சி செய்து உடல் நலத்தையும், உள நலத்தையும் மேம்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம் என சபதமேற்போம்.

கட்டுரையாளர் குறிப்பு

கட்டுரையாளர் நிலவளம் கு.கதிரவன்., செஞ்சி பகுதி எழுத்தாளர். யோகாவில் முதுகலை பட்டம் பெற்றவர். செஞ்சி நல்லாண்பிள்ளைபெற்றாள் மனவளக் கலை மன்றத்தின் உறுப்பினர்.

 


வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

  வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி -     நிலவளம் கு . கதிரவன் .,        இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும் , அக் கடவுள்களுக்கு எண்ணற்ற...