நிலவளம் கு. கதிரவன்
அண்மையில் இந்தியா
- சீனா கல்வான் உண்மை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control) நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததும், சீன தரப்பிலும் அதிகபட்சமாக
உயிரிழப்பும், காயங்களும் ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றமான நிலையே நீடித்து
வருகிறது. இதன் விளைவாக இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சூழ்நிலைகளைப்
பொறுத்து முடிவெடுத்துக்கொள்ள இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். அசாதாரணமான சூழ்நிலையில் துப்பாக்கி மற்றும்
ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் ராணுவம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீன ஊடகங்களின்
செய்தி
இந்த சூழ்நிலையை
சீன ஊடகங்கள் எவ்வாறு கையாள்கிறது? அரசின் குரலான குளோபல் டைம்ஸ் கடந்த
சில நாட்களாக தனது தலையங்கங்களில் தங்கள் நாட்டு ராணுவ வலிமையையும், சீனாவுடன் இந்தியா
மோதினால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் விதந்தோதி வருகிறது. 22.06.2020 நாளிட்ட அதன் தலையங்கத்தில், “நிராயுதபாணியான மோதல்களில் உங்கள்
வீரர்களால் சீன வீரர்களைக்கூட தோற்கடிக்க முடியாவிட்டால், துப்பாக்கிகளும்
இதர போர்த் தளவாடங்களும் உங்களுக்கு உதவாது” என்று இந்திய தேசியவாதிகளை
எச்சரிக்கிறது.
மேலும் குளோபல்
டைம்ஸ் கூறுகிறது, “இந்தியத் துருப்புகளின் நவீனமயமாக்கல், சீன ராணுவத்தைத்
தோற்கடிக்கவும், 1962 எல்லைப் போரில் இந்தியாவின் தோல்விக்கு சீனாவைப் பழி வாங்கவும்
வாய்ப்பாக இருக்கும் என சில இந்தியர்கள் ஆணவமாக நம்புகிறார்கள். 1962ஆம் ஆண்டில்
பொருளாதார வலிமையைப் பொறுத்தவரை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிக
வித்தியாசம் இல்லை. ஆனால், இன்று சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவை விட ஐந்து மடங்கு
அதிகமாகும். சீனாவின் ராணுவ செலவு இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகம். சீனாவுடனான
எல்லைப் பிரச்சினையை இந்தியா மோதல்களாகவோ அல்லது உள்ளூர் போர்களாகவோ
விரிவுபடுத்தினால் அது பாறையில் மோதிய முட்டையின் நிலைக்கு ஒப்பாகத்தான் இருக்கும்” எனக்
கொக்கரிக்கிறது.
18 நாடுகளுடன் எல்லைப்
பிரச்சினை
ஆனால் எவ்வளவு
கொக்கரித்தாலும் போரினை சீனா விரும்பவில்லை. சமாதானமாகவே பேச்சுவார்த்தையின்
வழியாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வினையே
குளோபல் டைம்ஸில் காண முடிகிறது. காரணம், சீனாவுக்கு 18 நாடுகளுடன் எல்லைப்
பிரச்சினை. உள்நாட்டு குழப்பங்கள். அரசு மீது குறைந்துவிட்ட மக்களின் நம்பிக்கை.
இவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டுமானால் முதலில் சீனா போரை விரும்பவில்லை. “சீனா - இந்தியா
எல்லைப் பிரச்சினையில் சீன மக்கள் அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை ராணுவத்தையும் நம்ப
வேண்டும். அவை சீனாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாக பாதுகாக்கும்” என்று மக்களைக்
கேட்டுக் கொள்வதிலிருந்து அறிய முடிகிறது.
சீன தயாரிப்புகளைத்
தடை செய்ய முடியுமா?
இந்த நிலையில்
இந்தியாவில் சீனப் பொருட்களுக்குத் தடை செய்ய வேண்டும். மக்கள் சீன பொருட்களை
வாங்குவதை நிறுத்த வேண்டும். இறக்குமதிக்குத் தடை ஏற்படுத்த வேண்டும் என்ற சுதேசி
கோஷங்கள் எழுந்து வருகிறது. அனைத்து சீன தயாரிப்புகளையும் தடை செய்ய வேண்டும்
என்கிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ மேஜர்
ரஞ்சித் சிங், “சீனப் பொருட்களை வெளியே எறிய வேண்டும். நம்மால் சீனாவின்
முதுகெலும்பை பொருளாதார ரீதியாக உடைக்க முடியும்” என்று கூறுகிறார். உச்சக்கட்ட
நகைச்சுவையாக, “சீன உணவகங்களை மூட வேண்டும். நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ்
போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும்”
என்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
இவர்கள்
கூறுவதுபோல் உடனடியாக சீனப் பொருட்களுக்கு தடை ஏற்படுத்திவிட முடியுமா? “சர்வதேச அளவில்
பொருளாதாரத்தில் இரண்டாவது மிகப் பெரிய நாடு சீனா. அண்டை நாடான இந்தியாவுடனான
வர்த்தகம் என்பது, உலகளாவிய வர்த்தகத்தின் ஒரு பகுதியே. ஆக, நாம் சீனப்
பொருட்களைத் தவிர்ப்பதால், அது சீனப் பொருளாதாரத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. உலகின் பிற
பகுதிகளுடன் அவ்வளவு எளிதில் துண்டித்துக் கொள்ளவும் முடியாது” என்று கூறுகிறார்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
புறக்கணிப்புகள் பலன் அளித்திருக்கிறதா?
1930ஆம் ஆண்டு ஜப்பானின் காலனி ஆதிக்கத்தை
எதிர்த்து அதன் பொருட்களை சீனா புறக்கணித்தது. 2003ஆம் ஆண்டு ஈராக்குக்கு அனுப்பிய படைகளின்
எண்ணிக்கையை பிரான்சு குறைத்ததால் அந்நாட்டுப் பொருட்களை அமெரிக்கா புறக்கணித்தது.
பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டின் பொருட்களை அரபு
நாடுகள் புறக்கணித்தன. இந்தப் புறக்கணிப்புகள் எதுவும் வெற்றி பெறவில்லை. சில
வாரங்களிலேயே முறியடிக்கப்பட்டன. காரணம், மக்களின் பொருளாதார தேடல் மற்றும் பொருள்
தேடும் வேட்கை அவர்களின் உணர்வுகளை எளிதில் தோற்கடித்து விடுகிறது.
சீனாவிடமிருந்து இந்தியா சராசரியாக 16 சதவிகிதம் இறக்குமதி செய்கிறது. மறுபுறம்
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சீனாவுடனான பங்கு வெறும் 3.2 சதவிகிதம் மட்டுமே. இந்த வர்த்தக
ஏற்றத்தாழ்வு இந்தியாவின் தீமைக்கே வழி வகுக்கும். ஸ்மார்ட்போன், தொலைத்தொடர்பு உபகரணங்கள், தொலைக்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், இணையப் பயன்பாட்டு உபகரணங்கள், சோலார் பவர், எஃகு, மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் குறிப்பாக கொரோனா
வைரஸை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றி வரும் Hydroxychloroquine உலகின் அனைத்து நாடுகளுக்கும் நாம்
ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்கிறோம். இம்மருந்துக்கான மூலப் பொருட்கள்
அதாவது Active
Pharmaceutical Ingredients சீனாவிடமிருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.
மோடியின் பதில்!
சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம், சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்
என்ற முழக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கடந்த ஆண்டு ஊடகவியலாளர் பிரதமர்
மோடி அவர்களிடம் கேள்வியை முன்வைக்கிறார். அதற்கு பிரதமர் அவர்கள், “உலகம் தற்போது இரு முனையாக இல்லை. இது
உலகமயமாக்கலின் காலம். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளன. இங்கு சர்வதேச சட்டங்கள் உள்ளன. நாம் அனைவரும் உலக வர்த்தக
மையத்தில் கையெழுத்திட்டுள்ளோம். ஓர் அரசு என்ற முறையில் நமது அதிகாரபூர்வ
நிலைப்பாடு சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இணைந்துள்ளது” என்று பதிலளிக்கிறார். இன்றைய சுதேசி
கோஷங்களுக்கும் இதுவே பதிலாகவும் அமைகிறது.
சரி. சீனப் பொருட்களைத் தடை செய்துவிட்டு நம்மால் தற்சார்பாக
நிற்க இயலாதா என்று கேட்கலாம். நிச்சயமாக முடியும். ஆனால் அதற்கான நீண்டகால
செயல்திட்டங்கள் அரசிடமே உள்ளது. இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வெற்றாக சுதேசி
கோஷங்கள் இருந்துவிடக் கூடாது.
“சீனாவிலிருந்து மற்றும் பிற
இடங்களிலிருந்து சுமார் 300 தயாரிப்புகளுக்கு அதிக வர்த்தக தடைகளை
விதிக்கவும்,
இறக்குமதி
வரிகளை அதிகரிக்கவும், நாட்டின் 4G நெட்வொர்க் மேம்படுத்தலில் சீன உபகரணங்களை
மாற்ற இந்தியத் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது. இவை இந்தியாவின் நீண்டகால திட்டங்களாக இருக்கலாம். ஆனால், சில ஊடகங்கள் இந்தத் திட்டங்களை
இந்தியாவின் சீன எதிர்ப்பு உணர்வை உயர்த்த பயன்படுத்துகின்றன” என்று குளோபல் டைம்ஸ் தனது தலையங்கத்தில்
பதிவு செய்துள்ளதையும் உணர்ச்சிவயப்படாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த சில மாதங்களுக்கு
முன்பு சிவகாசி பட்டாசுகளைத் தடை செய்துவிட்டு சீனப் பட்டாசுகளை அதிகம்
பயன்படுத்தலாம் என்று ஒரு வழக்கு போடப்பட்டது. அதில் எந்த அரசும் அந்த மனுவுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்னமும்கூட சீனப் பட்டாசுகளுக்கு வக்காலத்து
வாங்குவோரும்,
சிவகாசி
பட்டாசுகளை அழிக்க வேண்டும் என்று வரிந்து கட்டுவோரும் அதிகமாக உள்ளனர்.
பட்டாசுக்கே இந்த நிலை என்றால் உதிரி பாகங்களும், மருந்து பொருட்களுக்கான தற்சார்பும் எங்கே
கிடைத்துவிடப் போகிறது?
இந்திய தேசியவாதிகள் அவ்வப்போது சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க
அழைப்பு விடுத்தாலும், சீனா - இந்தியா வர்த்தகம்
விரிவடைந்துகொண்டுதான் வருகிறது. இந்தியா சீனாவிலிருந்து அதிகமான பொருட்களை
இறக்குமதி செய்தும் வருகிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் சீனாவுடன் இந்தியாவின்
பல்லாயிரக்கணக்கான வர்த்தக பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. சீனத் தயாரிப்புகளைப்
புறந்தள்ளிவிட்டு, இந்தியா மேற்கு நாடுகளிடமிருந்து ஒரே விலையில் வாங்க முடியுமா
என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விதேசியாக இல்லாமல் சுதேசியாக இருக்க
வேண்டும் என்பதுதான் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கனவு. ஆனால் அதற்காக அண்டை
நாட்டு வர்த்தகத்தோடு நம்மை துண்டித்துக்கொள்வது அல்ல தீர்வு. மாறாக சுயசார்பு
பொருளாதாரத்தை நோக்கிய ஆய்வு மற்றும் வளர்ச்சி (Research &
Development) , அரசாங்கத்தின் முறையான திட்டமிடல், கருத்தாக்கம் போன்ற கூறுகளே தற்சார்பு
பொருளாதாரம் முழுமையடைய வழி வகுக்கும்.
கட்டுரையாளர் குறிப்பு
கு.கதிரவன், செஞ்சியைச் சேர்ந்த எழுத்தாளர், நாட்டுப்புறக் கலைஞர். செஞ்சி திருக்குறள்
பேரவை,
தமிழியக்கம்
போன்ற அமைப்புகளில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
No comments:
Post a Comment