Sunday, 5 July 2020

காயம் காக்கும் யோகம்!


- நிலவளம் கு. கதிரவன்

(இன்று ஜூன் 21 சர்வதேச யோகா தினம்)

பாரத நாடு பழம்பெரும் நாடு. நமது புண்ணிய பூமியாம் பாரதத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல சித்த மஹா புருஷர்கள் அவதரித்து வலம் வந்த பூமியாகும். மக்கள் நெறிமுறைகளுடன் வாழ்வதற்கான பற்பல வழிகளை காட்டிச் சென்றுள்ளனர். அந்த வகையில் நமக்கு அரிதாக காட்டிச் சென்ற கலை யோகக் கலையாகும். காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா, மாயனார் குயவர் செய்த, மண் பாண்டம் ஓடா என்று ஒரு சித்தர் பாடியுள்ளார். இந்த உடல் நிலையானது என்ற நினைப்பில் ஆடம்பர அணிகலன்கள், ஆடை, தைலப் பூச்சு, ஆர்பாட்ட உணவு என்று வளர்த்து வருகிறார்கள். ஆனால் இந்த உடல் நிலையானது இல்லை. என்று கூறியிருந்தாலும் இந்த நிலையற்ற வாழ்க்கையில் இருக்கும் வரை நமது உடலை பேணிப் பாதுகாத்து ஆரோக்யமாக வாழவும் நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். அந்த வகையில் அவர்கள் நமக்கு கொடையாக வழங்கியதுதான் யோகக் கலையில் உள்ள ஆசனங்கள்.

யோகம் என்பதற்கான வேர்ச்சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியதாகும். யோகம் என்ற சொல்லுக்கு ஒருங்கிணைத்தல் அல்லது எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி முழுமைப்படுத்துதல் என்பது பொருளாகும். கலையும் மனதை அலையாமல் நேர் வழிப் படுத்தும் செயல்தான் யோகம். யோகம் என்பது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனித் திறன். பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இத்தகைய செயல் திறனையே போதிக்கிறார். உலகில் மனிதர்கள் மூன்று வகையில் உள்ளனர். அவர்கள் உருவத்தாலும், உணர்வாலும், அறிவாலும் வேறுபட்டு உள்ளனர். அத்தகைய மனிதர்கள் எவ்வித நோய் நொடியுமின்றி வாழவும், வந்த நோய் பறந்தோடவும் யோகாசனம் துணைபுரிகிறது.

இன்றைய உலகமயமாக்கலில் மக்களின் வாழ்வியல் முறை முற்றாக மாறியுள்ளது. அவசர உலகத்தில் போட்டி, பொறாமை, தன் முனைப்பு, ஒழுக்கக் கேடுகள், உணவு முறைகள் ஆகியவற்றால் இந்த உடலானது பற்பல நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகிறது. மாணவர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பாடச் சுமை, தேர்வுகள், தேர்வில் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் குழப்பமும் மனச் சோர்வும் அடைகின்றனர். இதிலிருந்து விடுபட மனதை ஒருமுகப் படுத்த வேண்டும். உயிர்களுக்கு துன்பம் தரா உயர்ந்த செயல் ஒழுக்கமாகும். கல்வியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் கற்பிக்கப்படல் வேண்டும். அன்பும், பண்பும் மாணவர்கள் மனதில் உள்ளுணர்வாக வெளிப்படல் வேண்டும். அதற்கு பெரும் துணையாய் இருப்பதும், மாணவர்களின் உடல், மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வழி செய்வதும் அவர்களுக்கான எளிய முறை யோகாசன பயிற்சிகள் பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் உடல் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், காந்த ஓட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியவை சீர்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மற்றும் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும். உடல் நலம் மற்றும் மன நலம் மேம்படும்.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே

என்றார் திருமூலர். நமது உடம்பை இழுக்கென்றும், அழுக்கென்றும் எண்ணுவதை பேதமை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறைவன் என் உள்ளேயும் இருந்து என்னைப் பெருமைப் படுத்துகிறான் என்ற மெய்யறிவில் மேனி சிலிர்த்தார் திருமூலர். அவரே,

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்கிறார். அதாவது உடம்பை என்றது உடம்பின் வலிமையை மட்டுமல்ல. உடம்பில் உள்ள திறமைகளையும்தான் என்று உடல் நலத்தின் அவசியத்தையும், உள நலத்தின் மேன்மையையும் நமக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த உடல் என்று கூறப்படும் காயம் கல்பமாக மாறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி, ஆசனப் பயிற்சி, உளப் பயிற்சி அவசியமாகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்திய உடற்பயிற்சியானது மூன்று வகையாக உள்ளது. கைகளை வலிமையாக்கும் தண்டால் பயிற்சி, உட்கார்ந்து எழும் பயிற்சியான பஸ்கிப் பயிற்சி, வயிற்றுப் பகுதிக்கு உள்ளே உள்ள உறுப்புகளை வலிமைப்படுத்தி மூளை, நரம்புகள் முழுமையாக செயல்பட உதவும் ஆசனப் பயிற்சி என பிரித்து வைத்துள்ளனர்.

அதேபோல் யோகப் பயிற்சியில் ராஜயோகம், ஹடயோகம், கர்மயோகம், ஞான யோகம், பக்தியோகம், மந்திர யோகம் என பல பிரிவுகள் உள்ளது. இதில் ஹடயோகம் என்று கூறப்படுகிற யோகாசனங்கள் மொத்தம் 108 என்றும் அவற்றுள் மிக முக்கியமானவை 72 என்றும் கூறுவர். 72 முக்கிய யோகாசனங்களை ஏற்படுத்தியதற்கும் ஒரு காரணம் உண்டு. நல்ல உடல் வலிமை உள்ள ஒருவருக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை நாடித் துடிப்பு உண்டு. அந்த ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு ஆசனமாக மொத்தம் 72 ஆசனங்களை செய்ய வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்துரைத்துள்ளனர். இந்த ஆசன முறைகளை ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைப்படி, இயம, நியமங்களோடு வகுத்துள்ளனர். எந்த வழிமுறையை பின்பற்றினாலும், செல்லும் பாதை வேறானாலும் சென்று சேரும் இடம் ஒன்றுதான் என்று கூறுவது போன்று பலன் ஒன்றுதான்.

உடற்பயிற்சி பாவப் பதிவுகளை போக்க வல்லன. பாவப் பதிவு என்பது துன்பம் தரக் கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச் செயல் பதிவுகளும் ஆகும் என்கிறார் வேதாத்ரி மஹரிஷி. முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்கு சீர்குலைந்து அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு ஏற்பட்டு ( short circuit ) மனத்திலும், உடலிலும் நோய் தோன்றி அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே அதுவே வினைப் பதிவாகும் என்கிறார் மஹரிஷி. இதை முறையான யோகாசனப் பயிற்சியின் வழியே நீக்கலாம் என்று கூறி எளிய முறை யோகாசனப் பயிற்சி வழிமுறைகளையும் தந்துள்ளார். அதே போன்று ஈஷா யோக மையத்திலும் ஹடயோகப் பயிற்சிகள் அவர்களின் நெறிமுறைப்படி வழங்கப்படுகிறது.

மனித உடலானது பஞ்ச பூதங்களால் ஆனது. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூத அடுக்கு. பிருதிவி என்னும் மண், பரு உடலாகவும், அப்பு என்னும் நீர் ரத்தமாகவும், தேயு என்னும் நெருப்பு உடல் சூடாகவும், வாயு என்னும் காற்று மூச்சாகவும், ஆகாசம் என்பது உயிர்ச் சக்தியாகவும் இருக்கின்றன. நீர், நெருப்பு, காற்று இந்த மூன்றும் சேர்ந்து பருப்பொருளான உடலையும், நுண் பொருளான உயிர்ச் சக்தியையும் இணைத்து அவை நட்போடு இயங்கச் செய்கின்றன. இந்த அலைவரிசையில் மாற்றம் ஏற்படும்போது உடல் வலியாகவும், நோயாகவும் வெளிப்படுகிறது. இதை தவிர்க்க யோகாசனப் பயிற்சிகள் அவசியம் என்பதே அப்பெரியோர்கள் வலியுறுத்தும் வழிமுறைகளாகும்.

ஆசனம் என்பது உடல் உறுப்புக்களை உரிய முறையில் மடக்கி ஒரு நிலையில் கொண்டு வந்து அமர்ந்து அதன் மூலம் மனத்தினைக் கட்டுப்படுத்தும் இருப்பு நிலைதான் ஆசனம். ஆசனத்தில் நான்கு வகைகள் உள்ளது. இரு கால்களையும் நீட்டி பிறகு கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையிலிருந்து செய்யும் ஆசனங்கள், மல்லாந்து படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள், குப்புறப் படுத்துக் கொண்டு செய்யும் ஆசனம், நின்ற நிலையிலிருந்தே செய்யும் ஆசனம் ஆகும்.

இத்தகைய ஆசனங்களை தினசரி செய்து வரும்போது உடல் வளம், சுறுசுறுப்பான வாழ்க்கை, முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றல், நன்றாக பசி எடுத்தல், நோய்கள் ஆரம்ப நிலையிலேயே குணமாகுதல், இதயம், நுரையீரல், மூளை செழிப்படைதல், தடையற்ற ரத்த ஓட்டம், உடல் உறுப்புகள் விரைப்புத் தன்மையில்லாமல் செயலுக்கு இணங்கும் தன்மை பெறுதல், முக்கியமாக மூளைக்கு போதிய பிராண வாயு கிடைத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.

இது தவிர தேகத்திற்கு வந்த நோயினைப் போக்கி இனி நோய்கள் வராமல் காத்தல், உள்ளுறுப்பு, வெளியுறுப்புகளை தூய்மைப்படுத்தி அதனதன் பணிகளை செய்தல், செயலாற்றலை மிகுதிப்படுத்தி உடல் நலமும், மன வளமும் பெற்று வாழ்தல், தினசரி கழிவுகளை வெளியேற்றி உடலை கசடற்ற முறையில் வைத்துக் கொள்ளுதல், நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கை, மனதாலும், செயலாலும் உயர்ந்த வாழ்வைப் பெறுதல் போன்ற நன்மைகளும் யோகாசனப் பயிற்சியின் வழியாக கிடைக்கிறது.

பாரதத்தின் பாரம்பரியமான, மரபான கலையான யோகக் கலையின் பெருமையை உணர்ந்த ஐ.நா அமைப்பு ஜுன்-21ம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்து நமது பாரத கலைக்கு பெருமை சேர்த்துள்ளது. ஆனால் நாம்தான் இன்னும் விழிப்பற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தினசரி இந்த யோகாசனப் பயிற்சியை செய்து வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். இந்த யோகாசனப் பயிற்சியை தினசரி காலை 7.00 மணிக்குள் வெறும் வயிற்றுடன், தரையில் ஒரு விரிப்பு போட்டு அதன் மீது அமர்ந்து செய்ய வேண்டும். பெண்கள் மாத விலக்கு காலங்களில் செய்யாமல் இருப்பது நலம். எனவே இன்று முதல் யோகாசனப் பயிற்சி செய்து உடல் நலத்தையும், உள நலத்தையும் மேம்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம் என சபதமேற்போம்.

கட்டுரையாளர் குறிப்பு

கட்டுரையாளர் நிலவளம் கு.கதிரவன்., செஞ்சி பகுதி எழுத்தாளர். யோகாவில் முதுகலை பட்டம் பெற்றவர். செஞ்சி நல்லாண்பிள்ளைபெற்றாள் மனவளக் கலை மன்றத்தின் உறுப்பினர்.

 


No comments:

Post a Comment

வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

  வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி -     நிலவளம் கு . கதிரவன் .,        இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும் , அக் கடவுள்களுக்கு எண்ணற்ற...