அறம்
கொள்வீர் நியாயமார்களே
--------------------------------------------------------------------------
நிலவளம் கதிரவன்
வான்
முகர்ந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.
மேற்கண்ட பாடல் வரிகள் பட்டினப் பாலையில் வரும் நீரியல் சுழற்சி குறித்தான மிகத் தெளிவான விளக்கமாகும். வான் பொழியும் நீர் மலையில் விழுந்து, நிலத்தில் ஓடி, ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி, வயல்கள் பாய்ந்து உபரி நீர் கடலுக்கு செல்கிறது. இப்படி வானில் இருந்து பொழியும் நீரை உரியவாறு தேக்கி நீர் பருகவும், விவசாயம் செய்யவும் திட்டமிட்டு பயன்படுத்துவதே நீர் மேலாண்மையாகும். மழை பிணித்து ஆண்ட மன்னவன் – என்று கூறுகிறார் இளங்கோவடிகள். அதாவது முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி குளங்களில் சேமித்து அவற்றை தக்க முறையில் பயன்படுத்தி நாட்டை வளம் பெறச் செய்யும் மன்னன் என்பதே இதன் பொருளாகும். தமிழின நாகரீகச் சமூகத்தின் நீர் மேலாண்மை என்பது வேத காலத்திற்கு முற்பட்டதாகும். சுமார்
2400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் ஏரிகளுக்கு மதகு வடிவமைத்ததாக கூறுகிறார் தமிழரின் பாசன நுட்பம் குறித்தான ஆய்வறிஞர் பார்க்கர். இயற்கை நமதுக்கு தந்த மிக முக்கியமான கொடை நீராகும். நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு கூறிலும் உள்ளுறையாக நீர் அமைந்துள்து. இவ்வளவு விளக்கம் எதற்காக? ஏன்? என்று நினைக்கிறீர்களா? தொடர்ந்து கீழே படியுங்கள்.

இவ்வாண்டின் மிகப் பெரிய சோகம் தமிழகத்தில் பெய்த பருவ மழையாகும். இப் பருவமழை கடலூர் மற்றும் சென்னையில் மிகப் பெரிய பேரிடராக அமைந்து மக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் விளைவித்து நீண்ட உளவியல் நெருக்கடிக்கு மக்கள் தள்ளப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.
கடலூர் மாவட்டத்தை சூறையாடிய மழை குறித்தும் இழப்புகள் குறித்தும் தொடர்ந்து எழுதியும் காட்சிப்படுத்தியும் வந்த ஊடகங்கள் சென்னைப் பெரு மழை வந்த உடன் அப்படியே தனது கவனத்தை சென்னையின் பக்கம் திருப்பி கடலூரை மறந்தது. உச்சகட்டமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம் பாக்கம் ஏரி நீர் திறந்து விடப்பட்டதை மிகவும் பூதாகரமாக்கி இந்நிகழ்வினால் மட்டும்தான் சென்னை மூழ்கி பலர் இறந்தனர் என்றும் உடமைகளை மக்கள் இழந்தனர் என்றும் எழுதி வந்தன. சென்னைப் பெரு மழையின் போது காட்சி ஊடகங்கள் மரண ஓல பின்னோசையுடன் தினமும் மழை நீர் காட்சிகளை ஒளிபரப்பி மக்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கினர். அச்சு ஊடகங்களும் இதே பணியை செய்தன. அரசியல் தலைவர்களை சொல்லவே வேண்டாம். ஆளும் அரசை விமர்சிக்க காரணம் தேடிக் கொண்டிருந்த கட்சிகள் இதை வலுவாக பிடித்துக் கொண்டு செம்பரம்பாக்கம் அரசியலை தெளிவாக செய்து வந்தன.
சென்னைப் பெருமழையின்போது அரசு இயந்திரங்கள் முடங்கி சுத்தமாக எந்தப் பணியையுமே மேற்கொள்ளவில்லை. செம்பரம் பாக்கம் தண்ணீரை வெளியேற்றாமல் இருந்திருந்தால் இத்தகைய இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்பதே திரும்பத் திரும்ப கூறும் காரணங்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இத்தகைய பெரு மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. இத்தகைய எதிர்பாராத மழை பெய்த போது முதலில் அரசு தடுமாறியது என்று எடுத்துக் கொண்டாலும் பிறகு சுதாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்ததை உள்ளூர் மக்கள் நன்கு அறிவர். இல்லையெனில் மக்களின் கோபம் அரசு மீது சென்றிருந்தால் வீதிக்கு வந்திருப்பர். கேரளப் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியதாக ஒரு செய்தியைப் படித்தேன். இத்தகைய பேரிடர் கேரளாவில் நிகழ்ந்திருந்தால் மக்கள் முதல்வர் வீட்டின் முன் திரண்டிருப்பர் என்று கூறியதாக படித்தேன். எனவே மக்களுக்கே இது எதிர்பாராத ஒரு பேரிடர் என்பது தெரிந்திருக்கிறது. அரசு மட்டும் என்ன செய்யும் என்ற எதார்த்தத்தை மக்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.
சென்னைப் பெரு மழையின் போது ஊடகங்கள் பிரச்சனையின் பக்கமும், தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் நிவாரணத்திலும் கவனம் செலுத்தியபோது அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க யாருமே இல்லை. ஊடகங்கள் உட்பட. இந்திய வானிலை ஆய்வு மையம் 50
செண்டி மீட்டர் மழை பொழியும் என்று கூறியும் செம்பரம் பாக்கம் ஏரி நீரை வெளியேற்றாமல் ஒரேயடியாக டிசம்பர் 2ம் தேதி திறந்து விட்டதால்தான் இத்தகைய பேரழிவு ஏற்பட்டது என குற்றம் சாட்டுகின்றனர். பல நேரத்தில் வானிலை அறிவிப்பு பொய்த்துப் போவதும் உண்டு. அப்படி பொய்த்து மழை பொழியாமல் இருந்திருப்பின் ஏரி நீரினை வெளியேற்றினால் ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பாவது? அப்பொழுதும் அரசைத்தான் குற்றம் சாட்டுவார்கள். மேற்கண்ட காரணத்தைக் கூறியே. பிரச்சனைகளை எழுதிய ஊடகங்களாகட்டும் அல்லது அரசியல் தலைவர்களாகட்டும் இத்தகைய மாறுபட்ட கண்ணோட்டத்தை எண்ணிப் பார்த்தார்களா என்றால் இல்லை என்பதே அவலமாகும். வானிலை அறிவிப்பு பொய்த்து ஏரியின் கொள்ளளவு நீரை பெரும் பகுதி வெளியேற்றி இருந்தால் கோடை காலத்தில் சென்னை மக்களின் குடி நீருக்கு என்ன செய்வது? ஏனெனில் சென்னைக்கு மிக முக்கிய குடி நீர் ஆதாரம் செம்பரம் பாக்கம் ஏரி என்பதை அனைவரும் அறிவர்.
தேவைகள் இரண்டும் அத்தியாவசியமாக இருக்கும்போது அதாவது சென்னைக்கு குடி நீர் பஞ்சமும் வந்துவிடக் கூடாது. அதே வேளையில் சென்னைக்கு பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நிலையில் ஒரு சார்பு பாதிப்பை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது. டிசம்பர் 8-ம் நாளிட்ட இந்து தமிழ் நாளேட்டு கட்டுரையில் ( எப்படி இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி?) செம்பரம்பாக்கம் ஏரியை மேற்பார்வையிடும் களப்பணியாளர்கள் கூறியதாக குறிப்பிட்டிருந்தது. அதாவது, அடை மழைக் காலத்துல வரத்துக்கு ஏத்த மாதிரி தண்ணியை வெளியேத்தலைன்னா, ஏரியே உடைஞ்சிரும். அதே நேரத்துல, இது சென்னையோட குடிநீர்ங்கிறத மனசுல வெச்சுக்கிட்டு செயல்படணும். மொத்தமா திறந்துவிட்ற முடியாது என்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிட்ட நீரை விட 4 மடங்கு அதிகமான நீர் தாம்பரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து அடையாறுக்கு வந்திருக்கு என்று பதிவு செய்துள்ளது அங்குள்ள பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களின் மனநிலையாக இருந்ததை கவனத்தில் கொண்டால் டிசம்பர் 2ம் தேதி குறித்து மட்டுமே குற்றம் சாட்டுவது பொருத்தமாகாது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி முடிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்ற கணக்கீட்டை கண்காணித்தால் தொடர்ந்து
90% நீர் தேக்கி வைத்திருந்ததும், அவசர நேரத்தில் வரத்தை விட
150% வரை நீர் திறந்து விட்டிருப்பது தொடர் நிகழ்வாக இருந்ததை அறியலாம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட கீழ்க் கண்ட அட்டவணையைப் பார்த்தாலே உண்மை தெரியும்.
தேதி
|
கொள்ளளவு(மில்லியன் கன அடியில்)
|
நீர் இருப்பு(மில்லியன் கன அடியில்)
|
நீர் இருப்பு(கன அடி- வினாடி)
|
வெளியேற்றம்( கனஅடி-வினாடி)
|
நவ-1
|
3645
|
228
|
127
|
46
|
நவ-10
|
3645
|
791
|
3330
|
54
|
நவ-14
|
3645
|
1634
|
4589
|
74
|
நவ-15
|
3645
|
1869
|
2784
|
64
|
நவ-16
|
3645
|
2703
|
9717
|
64
|
நவ-17
|
3645
|
3197
|
12031
|
18000
|
நவ-18
|
3645
|
3040
|
4247
|
800
|
நவ-25
|
3645
|
3191
|
5629
|
5000
|
நவ-26
|
3645
|
3140
|
2165
|
2500
|
நவ-27
|
3645
|
3120
|
1100
|
1000
|
நவ-28
|
3645
|
3125
|
610
|
500
|
நவ-29
|
3645
|
3132
|
510
|
570
|
நவ-30
|
3645
|
3126
|
500
|
600
|
டிச-1
|
3645
|
3141
|
960
|
900
|
டிச-2
|
3645
|
3396
|
26000
|
29000
|
டிச-3
|
3645
|
3094
|
10200
|
11000
|
மேற்கண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட அட்டவணையை கவனித்தால் உதாரணத்திற்கு நவம்பர் 17
ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு
12031 கன அடி. ஆனால் வெளியேற்றியதோ
18000 கன அடி. ஆக அதிகாரிகள் விழிப்போடுதான் ஏரி நீரை பராமரித்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இது தவிர நவம்பர் மாத மத்தியிலிருந்து அரசு பல்வேறு முறை ஏரி நீர் அபாயத்தைப் பற்றி எச்சரித்தே வந்துள்ளன.பெருமழை நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பு களப்பணியாளர்கள் மேற்கொண்ட பணிகள் அசாதாரணமானது. மின்சாரம் இல்லை, பாம்புகள் நடமாட்டம் ,தனது குடும்பத்தை விட்டு இரவு பகல் பாராமல் பராமரிப்பு பணியை மேற்கொண்டது என இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது சம்பந்தமான அறிக்கை முதல்வர் பெயரில் வெளியிடுவதை வைத்துக் கொண்டு பேரிடர் காலத்தில் நீர் வெளியேற்றத்தோடு முடிச்சு போடுவது மிகவும் அபத்தமான ஒன்றாகும். இது சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலர் மிக விவராமாக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் புறந்தள்ளி செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றத்தை மட்டுமே சென்னைப் பெருவெள்ளத்தோடு தொடர்பு படுத்துவது அப்பட்டமான அரசியலாகும். இதையும் தாண்டி தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து அடையாற்றில் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் கன அடி நீரும் இதோடு சேர்ந்ததை ஏன் அனைவரும் மறந்து பேசுகின்றனர்?
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே – என்கிறது புறநானூறு. தைத்ரீய உபநிடதமும் நீரே உணவு என்பதை கூறுகிறது. வான் பொழியும் நீரை பாது காத்து வயல் பாய்ச்சுவதும், தேக்கி வைத்து எதிர்காலத் தேவைக்காக பயன்படுத்துவதுதான் ஒரு நாகரீகச் சமூகத்தின் பண்பாடு. நாகரீகம். இதைத் தவிர்த்து உண்மைக்கு புறம்பாக பேசுவதும் எழுதுவதும் அறத்தை மீறிய செயல்களே ஆகும்.
ஊடகங்களை விடுங்கள். அரசியல் தலைவர்களை புறந் தள்ளுங்கள். ஒரு செய்தியையும் கருத்தையும் பிரிக்கும் நூலிழை மீதான கவனம் நமக்கு அனைவருக்கும் வேண்டும். காரணம் அரசியல் என்பதே ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்துதான் தொடங்குகிறது. உண்மையை உணர்வோம். அறங்கொண்டு வாழ்வோம்.