Thursday, 19 February 2015

அரவிந்த் கெஜ்ரிவால்: பேரலையின் நாயகன்.

                அரவிந்த் கோபிந்த் ராம் கெஜ்ரிவால் என்கிற அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும்  ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.  பிப்ரவரி  14 அன்று அடித்த தேர்தல் முடிவு சுனாமியி
ல் காங்கிரஸ் கட்சியையும், மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் கரை ஒதுங்கக் கூட இயலாத அளவுக்கு டெல்லி மக்கள் புரட்டி போட்டுள்ளனர்.

     ‌கோபிந்த்ராம் கெஜ்ரிவாலுக்கும், கீதா தேவிக்கும் 1968ம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.  ஐஐடி படிப்பு முடித்த பின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐஆர்எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்திய அரசில் வருமானவரித் துறையில் வேலை செய்தவர்.  இந்த வேலையிலும் பிடிப்பு கொள்ளாமல் பரிவர்த்தன் என்ற பொது சேவை அமைப்பை தொடங்கி மக்களுக்கு தொண்டாற்றி வந்தார்.  காலச் சக்கரத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம். ஆம் ஆத்மி என்ற சாமானியனுக்கான கட்சியை தொடங்கி இதோ இன்று இரண்டாவது முறையாக டெல்லி பட்டினத்திற்கு முதல்வராகிவிட்டார்.

     அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றியால் ஆளும் மத்திய அரசில் அதிர்வலைகளையும், தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் மனதில் சலனத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.  இவரின் நீண்ட பயணத்தில் கிடைத்த இவ்வெற்றி அவ்வளவு சாதாரணமானதா?  நினைத்தவுடன் நம் ஊர்த் தலைவர்கள் கெஜ்ரிவாலாக மாறி நாளையே தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிவிட முடியுமா?  முதலில் இவரின் வெற்றிக்கு முன்னர் கடந்து வந்த பாதையை ஆய்வு செய்வது முக்கியம்.

      சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டியும், அவர்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கும் விதமாகவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் பரிவர்த்தன் என்ற சமூக நல அமைப்பு.  இவ்வமைப்பின் மூலம் பல்லாண்டுகளாக சாமானிய மக்களுடைய பிரச்சனைகளை களைவதற்காக அரசுடன் போராடி பல சலுகைகளை பெற்றுத் தந்தவர்.டெல்லி வாழ் மக்களுடைய பிரச்சனைகளான குடிநீர் மற்றும் மின்சார பிரச்சனைகளுக்காக களத்திலிருந்து போராடியவர்.  அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து ஊழலுக்கு எதிரான லோக்ஜன்பல் வேண்டி போராட்டக் களத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  இப்படி பல நீண்ட வரலாறு படைத்தவர்.

     டெல்லி தேர்தல் முடிவு காட்டுவது ஆதரவு அலையா அல்லது மத்திய அரசுக்கான எதிர்ப்பு அலையா? என்றால் சந்தேகமே இல்லாமல் கெஜ்ரிவாலுக்கு உரிய ஆதரவு அலைதான் என்று சொல்வேன்.  மத்தி ஆளும் அரசிற்கான எதிர்ப்பு அலை என்றால் பாஜகாவின் ஓட்டு வங்கியில் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை.  பின்னர் ஏன் 3 இடங்களுடன் பின்னுக்கு தள்ளப்பட்டது என்றால் காங்கிரஸின் வாக்கு வங்கியில் பாதிக்கும் மேல் தற்பொழுது ஆம் ஆத்மி பெற்றதால் இத்தகைய பெரு வெற்றி அடைய முடிந்தது.  சிலர் மோடிக்கு எதிரான ஓட்டு என்கின்றனர்.  மிகச்சிறிய அளவிற்கு இதில் உண்மை இருக்கலாம்.  அதுவும் சமீபத்தில் கிருத்துவ தேவாலயங்கள் மீது நடைபெற்ற தாக்குதல், இந்து அமைப்புகளின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் இவற்றால் வாக்கு வங்கியில் சிறிதளவு சேதாரம் இருக்கலாம்.

     என்ன செய்ய வேண்டும் கெஜ்ரிவால்?  தன்னைச் சுற்றி அறிவு ஜீவிக்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டுள்ளார்.  அவர்களை மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும்.  பல கருத்து அபிப்பிராயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.  அசுர பலத்துடன் அதுவும் எதிர்க் கட்சியே இல்லை என்கின்ற அளவுக்கு ஆட்சிக்கு வந்துள்ளதால் இத்தகைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்.  அசுர பலம் என்பதால் எங்களுக்கு தலைக் கணம் இல்லை என்று இவர் கூறியிருப்பதை இங்கே கூறவேண்டும்.  மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாளாமல் சுமூகமாக  நடந்து கொண்டு டெல்லிக்கு தேவையானதை சாதிக்க வேண்டும்.  காரணம் டெல்லிக்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம்தான் உள்ளது.  சாதிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

No comments:

Post a Comment

வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

  வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி -     நிலவளம் கு . கதிரவன் .,        இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும் , அக் கடவுள்களுக்கு எண்ணற்ற...