ஸ்ரீ ஆண்டாள்
- நிலவளம் கதிரவன்
------------------
பண்ணிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் ஆவார். கோதை நாச்சியார் என்ற இயற்பெயர் கொண்ட ஆண்டாள் அவதரித்தது கலியுகம், நள வருடம், ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மாடத்தில் அவதரித்தார். கோதை என்பதற்கு தமிழ் மாலை என்று பெயர். வடமொழியில் வாக்கைக் கொடுப்பவர் என்று பொருள். கோதை அவதரித்த காலம் கி.பி.1885, நவம்பர்
25ம் நாள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
ஸ்ரீ வைஷ்ணவர்களால் பொக்கிஷமாக கருதப்படுவதும், தமிழ் வேதம் அல்லது திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பாவை 30 பாடல்களும் நாச்சியார் திருமொழி 143 பாடல்களுமாக மொத்தம் 173 பாடல்களை இயற்றியுள்ளார்.
பெரியாழ்வார் இயல்பாகவே தமிழ்க்கவியாதலால் கோதை நாச்சியாரும் அவரிடம் தமிழ் பயின்று புலமை பெற்றார். பெரியாழ்வார் தினசரி வடபத்ரிசாயி கோயிலில் உள்ள அரங்கனுக்கு கோதையால் கோர்க்கப்பட்ட மாலையைக் கொண்டு சாற்றுவது வழக்கம். அப்படி வழங்கும்போது கோதையானவள் அரங்கனுக்கு சாற்றுவதற்கு முன் தான் அணிந்து அழகு பார்த்து பின்னர் தந்தை பெரியாழ்வாரிடம் கொடுத்தனுப்புவது வழக்கம். இதையறிந்த பெரியாழ்வார் இச் செயலை கண்டித்தபோதும் பிடிவாதமாக அரங்கனையே கைபிடிப்பேன் என சபதமிட்டு அரங்கன் உத்திரவுப்படி பின்னர் அவரோடு சங்கமமானவர் ஆண்டாள் ஆவார்.
ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பாடல்கள் அனைத்தும் இலக்கியச் சுவை நிரம்பியவை. திருப்பாவை 30 பாடல்களும் கண்ணனை அடைய வேண்டி பாவை நோன்பு நோற்பதும், மழை வேண்டி வருண பகவானை வேண்டி நிற்பதையும் காணலாம். நாச்சியார் திருமொழியில் கண்ணனை மோகித்து அவனோடு இரண்டற கலந்து நிற்பதையும் காணலாம்.
ஆண்டாள் ஒரு பெண் போராளி எனலாம். காரணம் பெண்களின் வேட்கையினை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியை உடைத்து தன் காதலை வெளிப்படுத்தி மரபை உடைத்த பெண் இலக்கியவாதி அவள். ஆண்டாளினைப் பற்றி யோசிக்கும்போது அவளை ஒரு அறியாப் பெண்ணாக, நாராயணனையே நினைத்து அவனுக்கு வாழ்க்கைப்பட பிடிவாதம் செய்யும் பெண்ணாக மட்டும் நினைக்க முடியவில்லை. அவரது பாடல்களில் தேர்ந்த புலமையும், திறமையும் நம்மை பிரமிக்க வைக்கிறது.
திருப்பாவை 30 பாடல்களும் இயற்றர வினைகொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தது. நாச்சியார் திருமொழி ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என களி நடனம் புரிகின்றன. இதனால் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என அழைக்கப்படுகிறார்.
ஆண்டாள் திருப்பாவை:
முதலில் வைத்த பெயர் சங்கத் தமிழ்மாலை. பின்னர் வைத்த பெயரே திருப்பாவை என இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். திருப்பாவையில் பாவை நோன்பு நோற்பதும், மழை வேண்டி விரதம் இருப்பதையும், அவற்றின் முறைமையையும் மிக அழகாக விவரிக்கிறார். பாவை நோன்பு என்பது பழந்தமிழரின் வழக்கமாகும். தொல்காப்பியத்தில் பாவைப்பாட்டு, சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றினை, பரிபாடல்களில் பாவை நோன்பும், தைந் நீராடலுமாக குறிக்கப்படுகிறது.
ஸ்ரீ வில்லிபுத்தூரை ஆயற்பாடியாகக் கொண்டு, வடபெருங் கோயிலை நந்தர் கோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருணனாகவும் பாவித்து பாடியதே திருப்பாவையாகும். கோதையைப் பொருத்தவரை கண்ணனை அடைவது அதற்கான நோன்பிருப்பது என்றிருப்பினும் ஜீவாத்மாவாகிய மனிதர்கள் பரமாத்மாவாகிய ஸ்ரீ நாராயணனை அடைய வேண்டி பாடப்பெற்றதாகவும் பொருள் கொள்ளலாம்.
பாவை நோன்பு பெரும்பாலும் மார்கழி மாதத்திலேயே கடைபிடிக்கப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்கிறார் கிருஷ்ணன் தனது கீதை உரையில். தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம். முதல் ஆறு மாதம் தட்சிணாயன காலம் என்றும் பின் ஆறு மாதங்கள் உத்ராயண காலம் என்றும் கூறுவர். அதாவது தட்சிணாயன காலம் பகல். உத்ராயண காலம் இரவு. தட்சிணாயன காலம் நிறைவான விடியற்காலைப் பொழுதே மார்கழியாகும். இந்த விடியற்காலைப் பொழுதில் எழுந்து நீராடி நோன்பிருந்து பகவானை அடைவதற்கான உபாயமாக பெரியோர்கள் நமக்கு அருளியுள்ளார்கள். விஞ்ஞான முறையில் கூற வேண்டுமானால் மார்கழி விடியற்காலைப் பொழுதில் ஓசோன் வாயு அதிகம். அவ்வாயுவை நாம் சுவாசிக்கும்போது உடல் நலன் சீராக இருப்பதற்கு வழியுண்டாகும் மற்றும் சூரியனின் வெப்பத்தில் இருந்து காப்பதும் அவ்வெப்பத்தின் வழி வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நம் உடலை பாதிக்காமல் இருப்பதற்கும் காரணம் ஓசோன் ஆகும்.
திருப்பாவையில் ஒவ்வொரு பத்து பாடல்களும் நோன்பின் ஒவ்வொரு நிலையை காட்டுவதாக அமைந்துள்ளது. இதில் நோன்பு எப்படி இருப்பது என்பதை மிக அழகாக கூறுகிறார். நோன்பு காலத்தில் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், அதிகாலையில் நீராட வேண்டும், கூந்தலுக்கு மலரிடக் கூடாது, செய்யக் கூடாத செயல்களையும், பேசக் கூடாத தீச் சொற்களையும் பேசக் கூடாது, கோள் சொல்லக் கூடாது, தக்கார்க்கு பொருளும், பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு நியமங்களை வெளிப்படுத்தியுள்ளார். தற்காலத்தில் கூட நோன்பு காலத்தில் இத்தகைய முறைமைகளை இன்றளவும் பெரியார்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதை காணலாம். அதாவது இறைவனை அடைய வேண்டுமானால் மெய் வருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதை மிக அழகாக சுட்டிக் காட்டியுள்ளதை காணலாம்.
அதே போன்று திருப்பாவையில் பொழுது விடியும் அடயாளங்களையும் சிறப்பாக கூறுகிறார் ஆண்டாள். அதாவது பொழுது விடியும் நற்காலைப் பொழுதில் கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுதல், பறவைகள் ஒலிப்பது, முனிவர்கள் மற்றும் யோகிகள் துயிலெழுந்து செல்வது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
ஸ்ரீ ஆண்டாளை தீர்க்கதரிசி, விஞ்ஞானி என கூறினால் அது மிகையாகாது. காரணம் ஆழி மழைக் கண்ணா….. என்ற 4வது பாடலில் மழை எவ்வாறு பொழிகிறது என்பதை நமக்கு விளக்கி அருள்கிறார். வருண தேவன் சமுத்திரத்தினுள் புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கருப்பாகி சக்கரம்போல் மின்னலடித்து சரங்கள்போல் மழை பொழிகின்றது என்கிறார். அதாவது தற்கால விஞ்ஞானம் கண்டுபிடித்த சூரியனால் ஈரம் உறிஞ்சப்பட்டு ஆவியாகி மேல்சென்று மேகம் கூடி கருத்து மின்னலடித்து பின்னர் மழை பொழிகின்றது என்று கூறியதை 9ம் நூற்றாண்டிலேயே கணித்து சொன்னவர் ஆண்டாள்.
ஆக திருப்பாவை 30 பாடல்களிலும் நோன்பு கடைபிடிப்பதற்கான நியமங்கள், கண்ணனை அடைவதற்கான வழிகள் போன்றவற்றை மிக கவித்துவமாக ஆண்டாள் விளக்கியிருப்பது பக்தியின் உயர் நெறி, நோன்பின் மாட்சிமை ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டுகிறது.
முறையாக நோன்பிருப்பதை திருப்பாவையிலும், நோன்பிற்கு பின்னர் காமன் என்னும் கண்ணனை அடையும் நிலையை நாச்சியார் திருமொழியில் விளக்குகிறார் ஆண்டாள். இதில் காமனை தொழுதல், நதிக்கரையில் கட்டிய மணல் வீட்டை, கோலத்தை கலைக்காதே என கெஞ்சுதல், அதிகாலைப் பொழுது பொய்கையில் குளிக்கும்போது ஆடையை கவர்ந்து செல்லும் கண்ணனிடம் திருப்பித் தர கெஞ்சுதல், கூடல் குறிப்பான அதாவது தலைவனைப் பிரிந்த பெண்கள் அவன் வருவான் என்ற நிமித்தம் அறிய தரையில் வட்டமிட்டு சுழித்து அக்கோடு இணைவதை வைத்து உறுதி செய்து கொளுதல் போன்ற காட்சிகளை நயம்பட உரைத்துள்ளார்.
வாழ்வியல் மற்றும் பக்தி நெறிகளையும், பரமாத்மா யார் ஜீவாத்மா யார் என்ற புரிதல்களையும், நமக்கு இலக்கியத் தமிழில் சுவைபட உரைத்த ஆண்டாள் அருளிய திருப்பாவை நூற்றாண்டு கடந்தும் போற்றப்படுகிறது என்றால் அதில் வியப்பில்லை.
****************************